Sunday, July 17, 2011

குற்றாலத்தில் உல்லாச படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு

குற்றாலம்: குற்றாலத்தில் படகு சாவரிக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரே மாதத்தில் ரூ.3.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் ஆனந்தமாக குளிப்பது தவிர பிரதான பொழுதுபோக்காக படகு சவாரி விளங்குகிறது. குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் பொதுபணி துறை வெள்ளமடை குளத்தில் சுற்றுலா துறை சார்பில் படகு சவாரி விடப்படுகிறது. இதில் 2 மறறும் 4 இருக்கைகள் கொண்ட படகுகள், துடுப்பு படகுகள், தனிநபர் படகுகள் ஆகியவை உள்ளன. காலை 9 மணிக்கு படகு சவாரி துவங்கும் முன்னரே ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி படகு சவாரி துவங்கியது. நேற்று வரை ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் வசூலாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த மாதம் 11ம் தேதி ஒரே நாளில் ரூ.22 ஆயிரம் வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு சீசனில் மொத்த வருமானமே ரூ.4 லட்சத்து 77 ஆயிரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் படகுக்காக சுற்றுலா பயணிகள் பதிவு செய்து விட்டு நீண்ட நேரம் காத்திருக்கும் அளவிற்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. எனவே கூடுதலாக படகுகள் விட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sunday, June 5, 2011

குற்றாலத்தில் குளித்து விட்டு திரும்பிய ஆட்டோ மீதுகார் மோதல்

குற்றாலம்: குற்றாலத்தில் குளித்து விட்டு ஆட்டோவில் திரும்பியவர்கள் மீது கார் மோதியதில்6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி வருவதால் நாடெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் குற்றால சீசனை அனுபவித்து விட்டு ஊர்களுக்கு திரும்பி சென்ற வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் தென்காசி கீழபறையடி தெருவை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 8 பேர் ஒரு ஆட்டோவிலும், சிலர் மோட்டார் சைக்கிளிலும் பழைய குற்றாலத்தில் குளித்து விட்டு மத்தளம்பாறை என்ற ஊர் வழியாக தென்காசி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த அம்பாசிடர் கார் ஒன்று ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு ஆட்டோவில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 ஆக 6 பேர் பலியாகினர்.

இறந்தவர்கள் விபரம் வருமாறு, சண்முகதாஸ், செந்தில், ராஜாமணி, கதிரேசன், சுந்தர், கார்த்திக் ஆகியோர் பலியாகினர். இசக்கிதாஸ், ஐயப்பன் இருவர் படுகாயம் அடைந்து தீவிர சிகிக்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குற்றாலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் தென்காசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, February 22, 2011

லிபியா வன்முறையில் திருநெல்வேலி இளைஞர் பலி

லிபியாவில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா (42) என்பவர் லிபியாவில் உள்ள ஹுண்டாய் குழுமத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார். இவர் லிபியாவில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவத்தின்போது கிளர்ச்சியாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுடப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கணவர் உயிரிழந்த விவரத்தை அவரது நண்பர் அசோக் குமார் தொலைபேசி மூலம் தெரிவித்ததாக முருகையாவின் மனைவி வெள்ளைத்தாய் கூறியுள்ளார்.

இதையடுத்து, லிபியாவில் இருந்து தனது கணவரின் உடலை தமிழகம் கொண்டு வர உதவுமாறு வெள்ளைத்தாய் மாவட்ட ஆட்சியர் ஜெயராமனிடம் மனு கொடுத்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அசோக் குமாரும் காயமடைந்துள்ளதாக வெள்ளைத்தாய் தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிச்சூடு காரணமாக தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாம் தீப்பிடித்து எரிந்துள்ளது என்றும் அசோக் குமார் வெள்ளைத்தாயிடம் கூறியுள்ளார்.

இதனிடையே, லிபியாவுக்கு கூட்டாக சென்ற தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மற்ற 22 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் வெள்ளைத்தாய் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அந்த குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்

Monday, May 10, 2010

Lemon City News

this is puliangudi news blogs....